ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே உள்ள அம்பேத்கர் நகரில் மீனவர் முருகவேல் தனது மனைவி காளியம்மாள், பெண் குழந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்பதாம் தேதி இரவு மீன்பிடிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு மீரா முகைதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மண்டபம் வடக்கு கடற்பகுதியிலிருந்து தென் கடற்பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது முருகவேல் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. பின்னர் படகின் பின்புறமாகச் சென்ற மற்ற மீனவர்களான முகமது ரகுமான்கான், ஜாகிர் உசேன், இருளாண்டி ஆகியோர் முருகவேலை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மண்டபம் கடலோரக் காவல் துறை உதவியுடன் மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர் உடல் இன்று காலை மரைக்காயர்பட்டினம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து, மண்டபம் கடலோரக் காவல் துறையினர் மீனவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முருகவேலின் மனைவி காளியம்மாள், "கணவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மீனவர்கள் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக என் கணவர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம். அவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பது கண்கூடாகக் தெரிகிறது. இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும், இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம்" என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: