வடகிழக்கு வங்கக் கடலில், மேற்கு வங்கம் டிக்ஹாவிற்கு 130 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாலசூருக்கு 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 800க்கு அதிகமான படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.