இராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் சொராப் பாபு, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தேர்தல் பணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேர்தல் முன்னேற்பாடு, தேர்தல் நன்னடத்தை விதிகள் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர், “மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 நிலை கண்காணிப்புக் குழுக்களும் ஒரு தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு வீதம் 3 குழுக்களும் என மொத்தம் 28 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
8 மணி நேர சுழற்ச்சி முறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 19 புகார்கள் வரப்பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1950 என்ற தகவல் தொடர்பு எண்ணிற்கு 1758 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் பேசிய தேர்தல் பார்வையாளர் சொராப் பாபு, “பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 8300321741 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தினமும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நேரிலும் சந்தித்து
தெரிவிக்கலாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...கடலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!