ராமநாதபுரம் மாவட்டம் வலசை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா கருவுற்ற நிலையில் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றுவந்தார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அவருக்குச் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் கடந்த இரண்டு தினங்களாக ரம்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதோடு தொடர்ந்து இரத்தப் போக்கு இருந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரம்யா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், எக்ஸ்ரே எடுத்தபோது அவரின் வயிற்றுக்குள் ஊசியைக் கவனக்குறைவாக வைத்துத் தைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பெண் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டார். இன்று காலை 11 மணியளவில் ஊசியை வெளியே எடுப்பதற்கான அறுவை சிகிச்சை தொடங்கி தற்போது உடலிலிருந்து மருத்துவர்கள் ஊசியை எடுத்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பெண்ணின் உறவினர்கள் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு சம்மந்தப்பட்ட செவிலியர்களைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவப் பணியின்போது அலட்சியமாகச் செயல்பட்ட செவிலியர் அன்புச்செல்வி மற்றும் மருத்துவர் முஹம்மது ஜாசிர் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் தள்ளுபடி!