ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திருவாடனை தொகுதியில் மட்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி சார்பில் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்ததை அடுத்து, நேற்று (மார்ச்.15) ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய, ஏராளமான வாகனங்களில் தொண்டர்களுடன் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு ஊர்வலமாக அவர் வந்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், விதிமுறைகளைமீறி அலுவலகத்தின் வாயிலில் நின்று வேட்பாளருடன் கூடுதலாக ஆட்கள் செல்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினரின் எச்சரிக்கைக்குப் பிறகு மூன்று பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர், வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம், தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் சாலையை வழிமறித்து, அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி சாலையின் நடுவே நின்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.