ராமநாதபுரத்தில் கரோனா நோய்த் தொற்றால் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், ராமநாதபுரத்தில் கரோனா நோய்த் தொற்றால் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிச் சடங்கு உரிய பாதுகாப்புடன் நடைபெறுகிறதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் ஈடிவி சார்பில் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, "கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது வரை மாவட்டத்தில் 78 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்படுகின்றன.
குறிப்பாக நல்லடக்கம் செய்யும் இடத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல் துறையினர், பொதுப்பணித்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நல்லடக்கம் செய்யும் முன்பு 12 அடி ஆழத்திற்கு குழி வெட்டி அதில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதில் பங்கேற்போர் உரிய பாதுகாப்பு உடைகள், முகக் கவசம் அணிந்து இறந்தவர்கள் உடலை புதைக்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் சுய தொழிலில் ஆர்வம் காட்டும் மாணவிகள்!