மக்கள் தங்களுக்குத் தாங்களே சுய ஊரடங்கு விதித்துக் கொள்ளுமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்று ராமநாதபுரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு பேருந்துகள், ரயில்கள் இயங்காமல் மாவட்டமே வெறிச்சோடி, பிரதமர் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.
மேலும் பிரதமர் மோடி தனது உரையில் பேசும்பொழுது கரோனா வைரஸை எதிர்த்து போராடிவரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தங்களின் நன்றியைத் தெரிவிக்க நேற்று மாலை ஐந்து மணிக்கு அனைவரும் தங்களது இல்லத்தில் உள்ள மாடி அல்லது பால்கனியில் நின்று கரவொலி எழுப்பி மணிகளை அடித்து தங்களது நன்றியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்படி, ராமநாதபுரம் தீயணைப்புத் துறையினர் சார்பாக கரோனா வைரசை எதிர்த்துப் போராடும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக கரவொலியும், அபாயம் மணியையும் ஒழித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும் இராமநாதபுரம் காவல் துறையினரும் கேணிகரை காவல்நிலையம் முன்பாக கைகளைத் தட்டி ஒலி எழுப்பி தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரசுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களுக்கு மக்கள் கரவொலி எழுப்பி தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.