ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை நிலையான வழிகாட்டல் நெறிமுறைகளின்படி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செப்.1 முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவ, மாணவியரை நிறுவன வாகனங்கள் இருக்கைகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (செப்.4) 150 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவர், பனைகுளத்தை சேர்ந்த ஒருவர் என இரண்டு மாணவர்கள் மற்றும் உதவியாளர் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரனிடம் கேட்ட போது, “கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வாகனத்தில் வந்து செல்லும் பனைக்குளம், இராமேஸ்வரம் பகுதி மாணவர் இருவர் மற்றும் கல்லூரி உதவியாளர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்கல்லூரி மாணவ, மாணவியர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி செயல்படாத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : அக்னித் தீர்த்த கடற்கரையில் புனித நீராட தடை