ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆண்டாவூரணி கிராமம் உள்ளது . இந்தப் பகுதியில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை பூர்வீகமாகக் கொண்ட நான்கு பெண்கள், ஆறு சிறுவர்கள் உள்பட 20 சர்க்கஸ் தொழிலாளர்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் சாகசங்கள் செய்தும், ஒட்டகம், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றை வைத்து வித்தை காண்பித்தும் பிழைப்பு நடத்தி வந்தனர்.
இதனிடையே, கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் ஆண்டாவூரணி கிராமத்திலேயே அவகள் முடங்கியுள்ளனர்.
தற்போது உணவுக்கே வழியின்றி பசியும் பட்டினியுமாக வாழ்ந்துவரும் இவர்கள், வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவு வழங்க முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்களுள் ஒருவரான சண்முகம் கூறுகையில், "கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி இங்கு நடைபெறும் திருவிழாவிற்காக வந்தோம். ஊரடங்கு காரணமாக மொத்தமாக முடங்கிப்போய் இங்கேயே தங்கியிருக்கிறோம். ஊரடங்கின் தொடக்கத்தில் ஊர் மக்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் என பலரும் உதவினர்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் பொதுமக்களும் உதவி செய்யும் நிலையில் இல்லை. இதனால், எங்களுக்கு உதவி கிடைக்காமல் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். உணவிற்கு வழியில்லாமல் திண்டாடி வருகிறோம்" என வேதனைத் தெரிவித்தார்.
மேலும், உயிர் பிழைக்கச் சிரமப்படும் எங்களுக்கும், சர்க்கஸ் பிராணிகளான ஒட்டகம், குதிரைகள், நாய்களுக்கும் உணவு அளிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!