ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் ஜனவரியில் பெய்த மழையின் காரணமாக ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேலான விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்திய - மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று (பிப்.5) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குயவன்குடி, கழுகுரணி, ஆர்எஸ் மங்கலம், பரமக்குடி பகுதியில் உள்ள நைனார் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சிவகாமி உடனிருந்தார்.
இந்த ஆய்வு குறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய குழுவினர் முறையாக விவசாய நிலங்களை பார்வையிடவில்லை. சாலையின் அருகே இருந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு ஆய்வு செய்தவர்கள் எப்படி இழப்பீடு தொகை வழங்குவார்கள் என தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.