ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலச் செல்வனூர், கீழச் செல்வனூர், காஞ்சிரங்குடி, தேர்தங்கள், சித்தார்கோட்டை என ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த சரணாலயங்களுக்கு நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்புதாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்லும்.
இந்நிலையில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து தலைமையில் வனத்துறை அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள சரணாலயப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் சரணாலயங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் வனச் சரக அலுவலர் சதீஷ், சரணாலயப் பகுதியில் வசிக்கும் மக்கள் பங்கேற்று சரணாலயங்கள் சுற்றி உள்ள பகுதிகளில் மரம் நடுதல், குளங்கள் தூர்வாருதல், கருவேல மரங்களை அகற்றி அந்த மரங்களை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு வனத்துறை ஏற்பாடு செய்து தருவதாகவும் அதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.