இலங்கை மன்னாரிலிருந்து சந்தேக படகில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி கம்பிபாடு வடக்கு கடற்கரை பகுதிக்கு நேற்று (ஜூலை 21) வந்த ஒருவரை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை மேலத்தெருவை பூர்வீகமாகக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசநகர் முகவரியில் வசித்துவரும் முகம்மது உசேன் என்பது தெரியவந்தது.
இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துணி வியாபாரம் செய்வதற்காக பாஸ்போட் மூலம் இலங்கை கொழும்பு சென்றதாகவும் அங்கு தனது பாஸ்போட் தொலைந்து விட்டதாலும் தொடர்ந்து கரோனா நோய் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிர்த்துள்ளார்.
நண்பர்கள் சிலரின் ஆலோசனையின்படி நேற்று முன்தினம் (ஜூலை 20) மன்னார் வந்து ஏஜெண்ட் ஒருவர் மூலம் படகுக்கட்டணமாக ரூ. 50 ஆயிரம் கொடுத்து நேற்று (ஜூலை 21) மன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடியை அடுத்த கம்பிப்பாடு கடற்கரைக்கு வந்து தன்னை இறக்கிவிட்டு படகு திரும்பிச்சென்றுவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை கடலோர பாதுகாப்பு குழும காவல்நிலையத்திற்கு கொண்டுசென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.