ராமேஸ்வரத்தில் புண்ணிய ஸ்தலமான ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ள பகுதியில் அரசு மதுபானக் கடைகள் அமைக்கப்படவில்லை. சமீபத்தில், அங்கு மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இச்சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பாம்பன் பகுதியிலிருந்து மது பாட்டில்களை வாங்கி ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கடற்கரை உள்ளிட பல பகுதிகளில் சிலர் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வப்போது ராமேஸ்வரம் நகர காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ராமேஸ்வரம் பகுதியில் காவல் துறையினர் நேற்று (ஆகஸ்ட் 22) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாம்பனிலிருந்து வந்த காரை சோதனை செய்ததில், அக்காரில் 500 மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மது பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், காரை ஓட்டிவந்த ஜெயக்குமார் என்பவரை கைதுசெய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3.56 கோடி கஞ்சா பறிமுதல்; வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிரடி!