ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டணம்காத்தான் அருகே உள்ள நேஷனல் பள்ளி, அரசுப்பள்ளி மாணவிகள் என 2500 மாணவர்கள் பங்கேற்று 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சி தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை ஏற்று தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் வறட்சி மாவட்டமாக இருப்பதால் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசுடன், மார்ட்டின் சேரிட்டபிள் அறக்கட்டளை இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சீதாப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை, பூவரசம்பூ மர விதைகள் விதைப்பந்தில் வைக்கப்படுகின்றன. ஒரு விதைப் பந்தில் நான்கு விதைகள் வீதம் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்ட 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விதைப்பந்துகளை மும்முரமாகச் செய்துவருகின்றனர். இந்நிகழ்வினை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாதமி, இந்தியன் ரெக்கார்டு சார்ட், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்னும் நான்கு உலக சாதனை நிறுவனங்கள் ஆய்வுசெய்து சான்றிதழ் அளிக்கவுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 2,500 மாணவர்கள் இணைந்து 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கவுள்ளோம்.
இதை மாவட்டம் முழுவதிலும் வீசி மாவட்டத்தை பசுமையாக மாற்ற உள்ளோம். இதில் எங்கள் பங்கு உள்ளது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய கேரள வீரர்