ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மயிலாடுவயல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் நாகூரான் (40), திருந்தார் மகன் முருகேசன் (45) ஆகியோர் வயல் காட்டில் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் இன்று வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பிவிட்டு அதன் 25 குட்டிகளை இரண்டு பெரிய ஓலை குடுவையில் கொண்டு மூடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு புறத்தில் இருந்து யாரோ வயல் வெளியில் வைத்தத் தீ மளமளவென 25 குட்டிகள் இருந்த குடுவைக்கும் பரவியது. இதனால் உள்ளே இருந்த 25 ஆடுகள் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் இருக்கும் என அறிய முடிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடானை தாசில்தார் சேகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆறுதல் தெரிவித்தார்.
ஆட்டுக் குட்டிகள் இறந்ததைக் கண்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடித்த காட்சி அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்!