ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுளளது. இதனைப் பயன்படுத்தி பலர் வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ஆதஞ்சேரி பகுதியில் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையில் தீவிர ரோந்து மேற்கொண்ட காவல் துறையினர், ஆதஞ்சேரி கற்பகச் செல்வம் இதம்பாடல் பகுதியைச் சேர்ந்த ராமு உள்ளிட்டோர் கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இவரிடமிருந்து ஆயிரம் லிட்டர் கள் பறிமுதல் செய்தனர். மேலும் 21,840 ரூபாய் ரொக்கப் பணமும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முருகன், சுதாகர், சத்யராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.