செப்டம்பர் 2ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் துவரடிமனை என்னும் கிராமத்தில் விநாயகர் சிலைகள் அதிகளவில் செய்யப்பட்டுவருகின்றன.
மற்ற மாநிலங்களில் செய்யப்படும் சிலைகளின் எண்ணிக்கை குறைவு, ஏனென்றால் தமிழ்நாட்டில் மாவு கலந்த பொருட்களால்தான் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் கரம்பை மண், தேங்காய் நார் போன்றவற்றை கொண்டு செய்யப்படும் விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்பு.
இதுகுறித்து சிலை செய்யும் தொழிலாளர் சங்கர் என்பவரிடம் கேட்டபோது, "கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு நல்ல ஆர்டர் வந்திருக்கிறது. இந்த ஆண்டு புது விதமாக ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற விநாயகர் சிலை, மர விதைகளை விதைத்து செய்யப்பட்ட விநாயகர் சிலை என வித்தியாசமாக செய்திருக்கிறோம். 27 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்துவருகிறோம்.
மக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாக கெமிக்கல் கலந்த விநாயகர் சிலைகளை வாங்கி தண்ணீரில் கரைப்பதை தவிர்த்து, இதுபோன்ற மண்ணால் ஆன சிலைகளை வாங்கி பயன்பெற வேண்டும். மேலும் இந்த தொழிலுக்கு அரசாங்கம் ஏதேனும் மானியம் தந்தால் நன்றாக இருக்கும். இந்த சிலை செய்யும் தொழிலை எங்களது பிள்ளைகள், வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவருக்குமே கற்றுக்கொடுத்து அவர்களும் இதனை செய்துவருகின்றனர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் அனைவரும் மண்ணாலான விநாயகர் சிலையை வாங்க வேண்டும்" என்றார்.