மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மூர்த்தி, விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சரவணன், திருமயம் தொகுதியில் போட்டியிடும் திருமேனி, ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வைரவன், கந்தர்வகோட்டை தனித் தொகுதியில் போட்டியிடும் கே.ஆர். எம், அறந்தாங்கித் தொகுதியில் போட்டியிடும் ஷேக் முகமது ஆகியோரை ஆதரித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மக்களின் ஆரோக்கியத்திற்காக இதுவரை எந்தத் திட்டமும் செய்யவில்லை. இதுவரை மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில், அதை மறைப்பதற்குத் தற்போது இலவசங்களை இரண்டு கட்சிகளும் மாறி மாறி அறிவித்துவருகின்றன. அவர்களிடம் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள்.
நான் 234 தொகுதிகளுக்கும் விரைவில் செல்வதற்காக ஹெலிகாப்டரில் வருகிறேன். ஆனால் அதைக் கேலி செய்கின்றனர். என்னுடைய சொந்தப் பணத்தில் ஹெலிகாப்டர் வாடகையைக் கட்டிவருகிறேன். நாங்கள் பணம் கொடுத்து ஆள்களைக் கூட்டி வரவில்லை. எங்களின் நேர்மையை நம்பி எங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவு தருகின்றனர்.
தமிழ்நாட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களையும் சுற்றிவருகிறோம். எங்களுடைய வாக்குறுதிகளை பாண்டு பத்திரம் மூலம் எழுதி கொடுத்து வாக்குறுதிகளைப் பொதுமக்களை இடத்திலேயே முன்வைக்கிறோம்.
ஒரு பக்கம் மதுக்கடைகளைத் திறந்துவைத்துள்ளார்கள். இன்னொரு பக்கம் தாலிக்குத் தங்கம் வழங்குகிறார்கள். மதுக்கடைகளைத் திறந்துவைப்பதன் மூலம் பல பெண்களின் தாலி பறிபோய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளைக் குறைக்கலாம். எங்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். கஜா புயல் நேரத்தில் மக்களையே பார்க்காமல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் பறந்துசென்றார்கள். நான் சொந்தப் பணத்தில் வருகிறேன். அதை ஏன் கேலிசெய்ய வேண்டும்?" என்றார்.
இதற்கிடையில், கூட்டத்திலிருந்த ஒருவர் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை இல்லை அது குறித்து நீங்கள் என்ன கூறவருகிறீர்கள் என்று கேட்டதற்கு, "தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை என்பதை விடுங்கள். எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். நூறு கிலோமீட்டருக்குள் நான் வேலை தருகிறேன். தமிழ் தமிழ் என்று கத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
நாளைய தமிழகம் சீரமைக்க வேண்டும் என்றால் ஏப்ரல் 6 எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புதிய மக்கள் நீதி மய்யம் இளைஞன் தோன்றியிருக்கிறார். அதற்கான அடையாளம் எனக்குத் தெரிகிறது.
எங்களுடைய வேட்பாளர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் ஒலிக்கக் கூடிய கருவிகள். மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கருவி, தலைமையில் நேர்மை இருந்தால் அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையாகத்தான் இருப்பார்கள். மேலே இருப்பவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். நான் வேலை செய்யும்போது என்னுடைய சொத்து மதிப்பைக் காட்டியிருக்கிறேன், அதற்கும் பல இடைஞ்சல்கள் வந்துள்ளன.
இல்லையென்றால் இன்னும் நூறு கோடிக்கு காட்டியிருப்பேன். நான் நேர்மையாகச் சம்பாதித்த பணம். தமிழ் மக்களைச் செழுமை கோட்டுக்குக் கொண்டுபோக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே போகக் கூடாது. என்னுடைய மய்யம் தமிழ்நாடுதான், அத்தனை உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் தலைவாசல் தமிழ்நாடுதான். எங்கள் கட்சியை வெற்றிபெற வைத்தால் மட்டும் போதாது அதிக வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கமலின் மாற்று என்பது ‘ஏமாற்று’ - அரசியல் நோக்கர் இளங்கோவன்