புதுக்கோட்டை கறம்பக்குடி தாலுகாவைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
![high, Court, madurai, bench, pudhukottai, Agni, river The loot of sand மணல் திருட்டு கறம்பக்குடி மணற்கொள்ளை sand theft in Karambakkudi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3918145_pict.png)
அம்மனுவில் "கறம்பக்குடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. கறம்பக்குடி மற்றும் அதன் அருகே உள்ள மணிவாயில் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆறுகளால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கும்.
தற்போது அப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள அக்னி ஆற்றில் ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி 30 அடிக்கும் மேல் தோண்டப்பட்டு 20-க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடப்பட்டுவருகிறது.
இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் திருட்டினால் கறம்பக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உத்தரவிட வேண்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.