புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம். அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகளோடு மத்திய அரசு மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் மூலமாக என்னென்ன கடன்கள்? எவ்வளவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ஜெயலலிதா தான் தனக்கு நன்றி கடன்பட்டவர் என்றும் ஜெயலலிதாவிற்கு தான் நல்லது செய்தபோதும் அவர் தனக்கு கெடுதல் தான் செய்தார் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், ஜெயக்குமார் யார்? அவர் எப்போது அதிமுகவிற்கு வந்தார், அவர் எங்கெல்லாம் இருந்தார் என்பன உள்ளிட்டவைகள் தனக்கு தெரியாது என்றார்.
தற்போதைய விவாதம், ஜெயலலிதா பிரச்னை குறித்தும் தனக்கும் தான் என்று கூறிய அவர், இதில் தேவையில்லாமல் ஜெயக்குமார் போன்றவர்கள் ஏன் என்னை பற்றி கருத்து சொல்கின்றனர்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தேவையற்ற விவாதத்தை துண்டிவிடுவதா?: அதிமுகவில் தான் உண்டதே கிடையாது என்றும், அப்படியிருக்கையில் எப்படி உண்டக வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும் என்றார். மேலும், ஜெயலலிதா தான் தன்னிடம் உண்டுள்ளார் என்றும். 35 ஆண்டுகளுக்கு முன் தான் பேசியதாக சில பத்தரிக்கை ஆதாரங்களை சிலர் காட்டினால் அதற்கு வழக்கு வேண்டுமெனால் போட சொல்லுங்கள் என்றும் அவர் கூறினார்.
தன்னைப் பொறுத்தவரையில், இந்த தேவையில்லாத விவாதத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினையின் போது, நிர்மலா சீதாராமன் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் கூறினார். நீட் தேர்வு விவாகரத்தில் (NEET Exam) தமிழகம் மட்டும் விலக்கு கேட்கும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதால் மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறினார்.
முன்பை விட தற்போது தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதாக குறிப்பிட்டார். தற்போது, நீட் தேர்விற்காக நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு மாணவர்கள் தயாராகி வருவதாகவும், வரும் காலங்களில் அதிக அளவு மாணவர்கள் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவார்கள் என்றார்.
இருப்பினும், நீட் தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு எனவும், இத்தேர்வை ரத்து செய்ய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், துரதிஷ்டவசமாக ஒரு சில சம்பவங்கள் இதுபோல் நடப்பது வேதனை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழிசை நீட் குறித்து கருத்து கூற வேண்டாம்: ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டியது இல்லை என்றும் ஆளுநராக இருந்து கொண்டு அரசியல் பேசுவது என்பது தவறு என்றும் கூறினார்.
அரசியல் பேச வேண்டும் என்றால் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் ரீதியாக கருத்து கூறலாம் என்றும் எம்பியாக உள்ளதால், தான் அப்பதவிக்காக பேசப்போவதாக தெரிவித்தார். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு எப்படி அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறுவார் என்றும் திமுகவுக்கு ஆதரவாக அவர் பேசுவார் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும் கூறினார்.
தற்போது தமிழகத்தில் திமுகவும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்வதால் காவேரி பிரச்சினையில் இருவரும் பேசி தீர்க்க வேண்டும் என்றார். கடந்த முறை, தமிழகத்தில் அதிமுகவும், கர்நாடகத்தில் பாஜகவும் ஆட்சி செய்தது. அப்போது இரண்டு கட்சிகளும் பேசி காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்கலாமே" என்றும் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகின.. ஆனால் எங்களுக்கு.." பட்டா, மின் இணைப்பு இல்லை என குமுறும் கிராம மக்கள்!