புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் "சுகாதாரமான உணவை உட்கொள்ளும் இயக்கம்” என்ற விழிப்புணர்வு விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், " ‘சுகாதாரமான உணவை உட்கொள்ளும் இயக்கம்‘ இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பங்கு பெற இந்தியா முழுவதும் 750 மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று. சுகாதாரமான உணவை உட்கொள்ளும் இயக்கத்தின் முக்கிய நோக்கம் பொது மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, சத்தான கிடைக்க செய்வதே ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவு தயாரிப்பாளர்கள், உணவு வணிகர்களுக்கு பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்குதல், நுகர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு, குறைவான கொழுப்பு, உப்பு மற்றும் இனிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள், அனைத்துறை அலுவலர்கள், உணவு வணிகர்கள், நுகர்வோர் கொண்ட குழுவினர்களை ஒருங்கிணைத்து சுகாதாரமான உணவை உட்கொள்ளும் இயக்கம் குறித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்" என்றார்.