புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சார்பில் நேற்று (டிசம்பர் 31) மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும் சட்டத்துறை அமைச்சரின் மகனுமான அண்ணாமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மாட்டு வண்டிகளுடன் கலந்து கொண்டனர். பெரிய மாடு பிரிவில் 19 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 31 ஜோடி மாட்டு வண்டிகளும் என 50 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாட்டிற்கு போகவர 8 கி.மீ. தூரமும், சிறிய மாட்டிற்கு போகவர 6 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. பெரிய மாடு பிரிவில் நடைபெற்ற போட்டியில் 19 ஜோடி மாடுகள் பங்கேற்ற நிலையில், முதல் பரிசான ரூ.1,00,045 யை மதுரை மாவட்டம் அவனியாபுரம் எஸ்.கே.ஆர் மோகன்சாமி மாடுகள் தட்டிச் சென்றது.
இரண்டாவது பரிசாக ரூ.75,045 யை தேனி மாவட்டம் கம்பம் தவமணி மாடுகள் தட்டிச் சென்றது. மூன்றாவது பரிசாக ரூ.50,045 யை புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி ஏ.சி.எல் குமார் மாடுகள் தட்டிச் சென்றது. நான்காவது பரிசாக ரூ.40,045 யை சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலம் கே.ஆர்.சேகர் மாடுகள் தட்டிச் சென்றது. இதேபோல் சிறிய மாடு பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதல் 4 இடங்களை பெற்ற மாட்டுவண்டி ஜோடிகளின் உரிமையாளர்கள் ரொக்கப் பரிசுகளை தட்டிச் சென்றனர். இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்