புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் அறந்தாங்கி வடக்கு வீதியில் பத்மநாதன் என்பவரது வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்த விதக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கிருந்த ஆட்டுக்குட்டியொன்று உயிரிழந்தது.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவரும் மழைக்கு இடிந்து விழுந்தது. கனமழையின் காரணமாக 21வது வார்டு சுக்கான் குளம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு அப்பகுதியிலுள்ள குளமும் சாலையும் ஒரே மட்டத்திலுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் குளத்திற்குள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே வாகனங்களை இயக்குகின்றனர். மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனை கருத்தில் கொணடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதையும் படிங்க: 'திருவண்ணாமலையில் டெங்குவிற்கு ஒரு உயிரிழப்புகூட இல்லை'