புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உதயச்சந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் அருகே தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார்.
பாலியல் புகார்: பாய்ந்தது போக்சோ
இந்நிலையில் உதயச்சந்திரன் 2019 டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஒன்பது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து தப்பித்துவந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உதயச்சந்திரனை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
6 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நேற்று (ஜூன் 29) நீதிபதி சத்யா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உதயச்சந்திரனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறைக்குள் சொகுசு வாழ்க்கை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!