புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டதாகவும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழக்கூடிய அனைத்து நாடுகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களையாபட்டி ஆகிய மூன்று ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு வடமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இன்று காலை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிலையில் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார். அப்போது செந்தில் தொண்டைமானின் 4 ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் இறக்கி விடப்பட்டன. இதில் மூன்று காளைகள் வீரரின் பிடியில் சிக்காமல் சென்றது. ஒரு காளை வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டபோது, வீரரின் பிடியில் சிக்கியது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை கொண்டு வந்தவர்கள் காளையை பிடித்த வீரரை தாக்க முற்பட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பார்வையாளர் மாடத்தில் இருந்த செந்தில் தொண்டைமான் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சமாதானப்படுத்தி காளையைப் பிடித்த வீரரை நேரில் அழைத்து அவருக்கு ரொக்க பரிசு வழங்கினர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் தொண்டைமான், "தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இலங்கையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைவரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.
ஹாக்கி, டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு எப்படி சர்வதேச அங்கீகாரம் இருக்கிறதோ, அதே போல் தமிழர்களின் கலாச்சாரமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்ததால் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதேபோல் தமிழர்கள் வாழக்கூடிய மற்ற நாடுகளிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இலங்கை முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் திட்டமிட்டு இலங்கைக்கு வருவதில்லை நான் தொடர்ந்து அதைக் கூறி வருகிறேன். கடலுக்கு எல்லை கிடையாது. கடலுக்கு அடியில் இலங்கையோ, இந்தியாவோ வரும்பொழுது தவறுதலாக வருகின்றனர். யாரும் திட்டமிட்டு சிறைக்கு செல்ல வேண்டும், தங்களது படகுகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று எண்ணி வருவது கிடையாது.
அப்படி வருபவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம். விரைவில் தமிழகம் மற்றும் இலங்கை மீன்வள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து பேசி மீனவர் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுப்பதற்கு முயற்சி செய்வேன்” என்று கூறினார்.