புதுக்கோட்டை: கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியைச் சுற்றி முடித்த சந்திரயான் 3 நிலவை நோக்கிச் சென்றது.
தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியின் மூலம் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்து உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவில் தரையிறங்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருந்தன. அது மட்டுமல்லாமல் தற்போது நிலவில் ஆராயப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா மாறி உள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தடம் பதித்து விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டெர் நிலவில் தர இறங்கி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், லேனா விளக்கு அருகே உள்ள மவுண்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர்கள், நிலவிற்கு வெற்றிகரமாக சந்திரயானை அனுப்பி வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 6,500 வாழ்த்து கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையத்திலிருந்து அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து வாழ்த்து கடிதங்களை பெற்றுக் கொண்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் நிலவிற்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தின் செயல் விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், உலகக் கோப்பை சதுரங்க போட்டியில் இறுதிச்சுற்றில் இரண்டாமிடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து சதுரங்க வடிவம் அமைத்தது அனைவரின் கண்ணையும் கவர்ந்தது. அதேபோல் இஸ்ரோ மற்றும் இந்தியா போன்று வடிவமைத்து தரையில் அமர்ந்து அனைவரையும் கவர்ந்தனர்.
பள்ளி தாளாளர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியின் நிறைவாக பல வண்ணங்கள் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலூன்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்விற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அருகே தேசிய கொடியை கையில் வைத்து அசைத்தபடி வானத்தை நோக்கி மாணவ மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு.. பெங்களூரு விரைந்தார் பிரதமர் மோடி!