புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோங்குடி வெள்ளாற்றுப் படுகையில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் சூரியபிரபு, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இதனையறியாமல், அங்கு சட்டவிரோதமாக மணல் அள்ள வந்த லாரி ஓட்டுநர், வட்டாட்சியரைக் கண்டதும் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த அத்தானி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (25) என்பவர் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை வட்டாட்சியர் சூரியபிரபு, தனது வாகனத்திலேயே கொண்டுசென்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசி சந்தைக்கு இறக்குமதியான நெதர்லாந்து வெங்காயம்!