புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழுவின் தலைவர் ஜெயலெட்சுமி தமிழ்ச்செல்வன். இவர், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்ததால் அவ்வாறு சேர்ந்தபிறகு நடந்த முதல் கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பு கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டக் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயலெட்சுமி என்பவர் அந்தக் கட்சியில் வெறும் எட்டுப்பேர் மட்டுமே இருந்த நிலையில் பல உள்ளடி வேலைகளைச் செய்து மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தமிழ்நாடு மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அதற்குக் காரணம் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 12 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் என 14பேர் இருந்தும் வெறும் எட்டுப்பேர் மட்டும் இருந்த அதிமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சிக்குழுத் தலைவராக ஆக முடிந்தது என்பதுதான் பரபரப்புக்குக் காரணமாக இருந்தது.
அதே போல் காங்கிரஸ் கட்சியில் தேர்வானவர் உமா.மகேசுவரி, அவர் துணைத் தலைவர் ஆக்கப் பட்டார். அப்படியே இருந்த நிலையில் கடந்த வாரம் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெயலெட்சுமி தமிழ்ச்செல்வன் திமுகவில் சேர்ந்து விட்டார்.
அதன்பிறகு அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். அவர் சேர்ந்தபிறகு நடந்த முதல் சாதாரணக் கூட்டம் 27.8.2021 பகலில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அப்போது மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலெட்சுமி அவருக்கான தனி அறையில் இருந்தார். கூட்ட அரங்கிற்கு அவரும் வரவில்லை, திமுக உறுப்பினர்களும் வரவில்லை. அதிமுகவைச் சேர்ந்த இ.எஸ்.இராசேந்திரன், மணிகண்டன், சோ.பாண்டியன், ஆர்.கே.சிவசாமி, விஜயா, கவுசல்யா ஆகிய ஆறுபேர் மட்டுமே வந்திருந்தனர்.
தமாகா-வைச் சேர்ந்த சண்முகம் இறந்து விட்டதாலும் இவர்கள் அணியில் இருந்தவர்களில் ஜெயலெட்சுமி திமுகவிற்குத் தாவி விட்டதாலும் வெறும் ஆறுபேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் ஜெயலெட்சுமியைத் திட்டிக் கொண்டும் அதிமுகவில் போட்ட பிச்சைக்கு கட்சி மாறி விட்டாய், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியையும் மாவட்டக் கவுன்சில் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
அதனால் மாவட்டக் கவுன்சில் கூட்ட அரங்கு பரபரப்புக்குள்ளானது. அப்போது திட்ட அலுவலரான லெட்சுமி கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கு போதிய அளவு உறுப்பினர்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து கூச்சல் குழப்பத்துடன் அதிமுக உறுப்பினர்கள் ஆறுபேரும் வெளியேறிச் சென்றனர்.
அங்கு கணவர் தமிழ்ச்செல்வனுடன் வந்திருந்த ஜெயலெட்சுமி செய்தியாளர்களிடம் எதுவும் சொல்ல மறுத்து விட்டார். எப்போதும் அவருக்காகப் பேசும் தமிழ்ச்செல்வனும் பேச மறுத்து விட்டார். மேலும் இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
இதையும் படிங்க : மதுரை மேம்பால விபத்து - ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு