புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கோவிட் சித்த மருத்துவ மையத்தில் கோவிட் தொற்று நோயாளிகளுக்கு அன்பான பேச்சு, அழகான சிரிப்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் உம்மல் கதீஜா, கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மைய நோடல் அலுவலர் மருத்துவர் மாமுண்டி கூறுகையில்,
"கோவிட் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறைப்படி அமுக்கரா சூரண மாத்திரை நெல்லிக்காய் லேகியம், தாளி சாதி சூரணம் பிரமானந்த பைரவ மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு கபசுரக் குடிநீர், கிராம்பு குடிநீர், ஓமக்குடிநீர், பாரம்பரிய உணவு வகைகள், மூலிகைத் தாம்பூலம் வழங்கப்படுகிறது. புற மருத்துவமாக எட்டு வடிவ நடைப்பயிற்சி, மூலிகை தூபம், ஓமப்பொட்டணம், திருமூலர் பிராணயாமம், சுயவர்ம பயிற்சி யோக முத்திரைப் பயிற்சி போன்ற சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் அன்பான பேச்சு, அழகான சிரிப்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை தொடர்பாக தினமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழத் தேவைப்படும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தோடு வந்த நோயாளிகள் சுற்றுலா வந்ததுபோல் மகிழ்ச்சி வெள்ளத்தால் குணமடைந்து செல்கின்றனர்.
நாள்தோறும் மேற்கண்ட பயிற்சியை சித்த மருத்துவர்கள் சரவணன், பத்மாவதி, வித்யா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் வழங்கி வருகிறார்கள்" என்றனர்.