புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாலைகளை ஆக்கிரமித்து காய்கறி கடைகளை அமைத்து கடைக்காரர்கள் வியாபாரம் செய்து வந்துள்ளனர். அது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூராக இருந்து வந்தது என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சிக்கு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றிக்கோரி அறிக்கை கொடுத்தும், ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்திருந்தார். அதை அந்த கடைக்காரர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரின் அனுமதியோடு ஆலங்குடி காவல்துறையின் துணையுடன் இன்று காலை ஜாகீர் உசேன் தெரு, பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நூறு கடைகளை பொக்லைன் எந்திர உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கடைக்காரர்கள் கலைஞர் சாலையில் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர், அதில் ஒரு கடைக்காரர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்த நிறுத்தினர்.
மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் தாசில்தார் அலுவலகத்தில் அந்த கடைக்காரர்களுடன் வர்த்தக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 5ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்னின்று அகற்றிக்கொள்வது என்றும், இதன் பிறகு வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி வர்த்தக சங்கம், கடைகாரர்கள் ஆகியோரிடம் எழுத்து மூலம் வாங்கிய உத்திரவாதத்தின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையும் படியுங்க: நகரத்துக்கு வந்தும் சாதி நம்மை வேட்டையாடுகிறது - பாலாஜி சக்திவேல்