மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்த 2005ஆம் ஆண்டு பிடாரி அம்மன் கோயிலின் 8 கோயில் சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரித்து திருடுபோன சிலைகளை மீட்டு சமர்ப்பித்தனர்.
கீரனூர் நீதித்துறை நடுவர் முன்பாக, கோயிலின் தர்மகர்த்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு திருடுபோன சிலைகள் அனைத்தையும் திரும்பவும் பெற்று, பூஜைகள் செய்யப்பட்டு, மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டது. அருகில் கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு
இந்நிலையில், தற்போது 8 சிலைகளையும் விசாரணைக்காக ஒப்படைக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கோயிலில் இருந்து எடுத்து வழங்கினால், பக்தர்களின் உணர்வுகள் பெருமளவில் பாதிக்கப்படும். அத்தோடு சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பாக அமையும்.
ஆகவே, கோயில் சிலைகளை விசாரணை தொடர்பாக ஒப்படைக்க தடை விதித்தும், அது தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விசாரணைக்காக, கோயில் சிலைகளை ஒப்படைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அன்னவாசல் காவல் துறை ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெல்லும் - ஓபிஎஸ்