புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் ஜூன் 26ஆம் தேதி மயக்கமடைந்து கீழே விழுந்ததனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டு பரிசோதனை செய்ததில் மூளையில் வலது மற்றும் இடது புறத்தில் முன்பக்கம் பக்கவாட்டு பகுதியில், மேல் பகுதியில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு மூன்று நாள்கள் சிகிச்சையளித்த நிலையிலும் உடல்நிலையில் முன்னேறாத காரணத்தினால், ஜூன் 30ஆம் தேதி மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் தலைமையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் சாய்பிரபா சரவணன் தலைமையில் மயக்க மருந்துகள் நோயாளிக்கு அளித்தனர். அவருடைய தலையில் இரு பக்கங்களிலும் இரண்டு துவாரங்கள் வீதம் நான்கு துவாரங்கள் போடப்பட்டு, அது வழியாக அந்த ரத்தக் கட்டி அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், விலையுயர்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டன. சிறிது சிறிதாக குணமடைந்த தேறிய ராஜேந்திரன் இன்று நல்ல நிலையில் வீடு திரும்பினார்.
ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும்போது வாயு வெளியேற்றம்
இதுபற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் கூறும்பொழுது, “வயதானவர்களுக்கு மூளையில் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மயக்கம் வந்து கீழே விழ நேரிடலாம். அப்படி கீழே விழுந்து எந்தவித அறிகுறியும் இல்லாத நோயாளிகள்கூட முன்னெச்சரிக்கையாக சிடி ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
மேலும் தனியார் மருத்துவமனையில் ரூபாய் ஒன்பது லட்சம்வரை செலவு செய்யக்கூடிய, இந்த சிகிச்சை இவருக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவையான கருவிகளும் கட்டமைப்புகளும் உள்ள காரணத்தினால் சொர்ப்ப பணத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு நல்ல நிலையில் வீடு திரும்புகிறார்” என தெரிவித்தார்.
மேலும் வசதி படைத்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய வசதி இருக்காது என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வரக்கூடிய காலங்களில் எந்த தருவாயில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தாலும் அவர்களை காப்பாற்றும் திறன் அரசு மருத்துவமனைக்கு உண்டு என்று அவர் கூறினார்.