புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நோய்த் தொற்றை கண்டறியும் வகையில் அதிக அளவிலான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்களுடைய கரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் இணையதள முகவரி, மாதிரி பரிந்துரை படிவம் (SRF ID) அனுப்பப்படும். இதன் வாயிலாக கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை தங்களது அலைபேசி எண் அல்லது www.covidpdktmc.com என்ற இணையத்தை பயன்படுத்தி எளிய முறையில் பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில்; உள்ள வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று தொற்றிற்கான அறிகுறிகள் கண்டறிவதற்காக 70 பேர் கொண்ட பயிற்சி செவிலியர்கள் செயல்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணி தொடர்பாக இக்குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதேபோன்று ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியில் அரசு திருவரங்குளம் செவிலியர் பயிற்சி மைய செவிலியர்கள், அரசு சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், நகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளர்கள், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள், நகர் நல அலுவலர், நகராட்சி பொறியாளர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் மேற்கொள்ளப்பட உள்ளனர் என்று தெரிவித்தார்.