புதுக்கோட்டை மாவட்டத்தில், இலுப்பூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் ஒருவர் இருந்து வந்துள்ளார். அவர் தனது அன்றாட சாப்பாட்டிற்கு அனைவரிடமும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை (ஆகஸ்ட் 11) திடீரென்று அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, "நான்கு நாட்களாக அந்த முதியவர் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இரண்டு நாள் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியிருக்கிறார். உடல் நிலை சரியில்லையா? எனத் தெரியவில்லை. ஆனால், ஒரே இடத்திலேயே இருந்தார்" என்றனர்.
நேற்று மதியம் தூய்மைப் பணியாளர்கள் குடிக்க குடிநீர் கொடுத்துள்ளனர். இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் அவர் இறந்து கிடந்ததைப் பார்த்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகனுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்பு காவல் துறை ஆய்வாளர் பார்வையிட்டு, சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
'தனி மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. தற்போது இருக்கும் கரோனா காலச் சூழ்நிலையில் பெரும்பான்மையான மக்களுக்கு சாப்பாட்டுக்கே வழியின்றி வறுமை ஏற்பட்டிருப்பதாகவும்; மேலும் இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!