புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வெள்ளாஞ்சார் காலணியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் அத்தை மகனுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த பெண்ணிற்கு 17 வயதுதான் ஆகிறது அதற்குள் திருமணமா? என்ற குற்றச்சாட்டு அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சம்பவம் அறிந்து வந்த சைல்டு பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர்கள், காவல் துறையினருடன் வெள்ளாஞ்சார் காலணிக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து பேசினர்.
இதையடுத்து 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், விராலிமலை பகுதிகளில் கோவில்காட்டுப்பட்டி, கோமங்கலம், ராஜகிரி ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் அந்த நான்கு சிறுமிகளும் குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சைல்டு நல அதிகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் அதிகப்படியான குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு எங்களது பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். இதுபோன்று நடக்காமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்' என அவர் தெரிவித்தார்.