புதுக்கோட்டை: மணமேல்குடி தாலுகா, சிறுவரை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (30). இவர் அதே பகுதியில் உள்ள பாலத்தில் அமர்ந்து நண்பர்களுடன் உணவருந்தி விட்டு கை கழுவும் போது, நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த அவரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை, அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ரஞ்சித்துக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, ரஞ்சித்தை காப்பாற்றிவிடலாம் என்ற மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில், அங்கு சிகிச்சை மேற்கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையில், ரஞ்சித் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு நாட்கள் முடிந்தும் போதிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி ரஞ்சித் தீடீரென இன்று உயிரிழந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் ரஞ்சித் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்ட போது, ஒரு மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர் உறுதியளித்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே திரும்பியுள்ளனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அதே மருத்துவரின் மேற்பார்வையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் இரண்டு நாட்களாகியும் போதிய மருத்துவ சிகிச்சை வழங்காததால் ரஞ்சித் உயிரிழந்தார் என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ரஞ்சித் மரணத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இறந்தவரின் உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, காவல்துறை ஆகியோருடன் ரஞ்சித்தின் உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ரஞ்சித் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுச் சென்றனர். போதிய மருத்துவ சிகிச்சை வழங்காததால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவரின் செயல்பாடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் நடப்பது என்ன? - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்!