புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பாஜகவில் நீண்ட கால உறுப்பினராகவும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தவர் சீனிவாசன். இவர் புதுக்கோட்டை மாவட்ட பாஜகவினர் ஒரு பாதையில் சென்றால், இவர் மட்டும் தனி பாதையில் செல்வார் என பலரால் விமர்சிக்கப்படுகிறது.
அதாவது ஆளுநருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுவது, பேனா சிலைக்கு எதிராக கடல் மாதா கூறுவது போல, பேனா வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டுவது, டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை குறித்து போராட்டம் நடத்துவது, டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை விற்பதை கேலி செய்யும் விதமாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவது என இவ்வாறு தனக்குத்தானே விளம்பரம் செய்து கொள்வார் என கூறப்படுகிறது.
அவ்வாறு செய்யும் போது பல விமர்சனங்களுக்கும் உள்ளாவார். இதனால் பாஜக மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், இவருக்கும் இடையே இடைவெளியானது அதிகமானது. ஒரு காலகட்டத்தில் இவர் வகித்து வந்த அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவ்வாறு இவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை பறித்தும், இவர் எவ்வித வருத்தமும் இல்லாமல் வழக்கம் போல் இவரது நடவடிக்கையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் சேகர்பாபுவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 108 தோலுரித்த வாழைப்பழங்களை கொரியர் மூலமாக அனுப்ப முயற்சி செய்துள்ளார். ஆப்போது காவல்துறையினர் சீனிவாசனை தடுத்து நிறுத்தி வாழைப்பழங்கள் பார்சலை பறிமுதல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னையில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேசிய சனாதனம் குறித்த கருத்து பல்வேறு பிரச்சினைகளையும், எதிர் வினைகளையும் ஆற்றி வருகிறது.
இதே போன்று, சனாதனம் எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு சனாதனம் என்பது வாழைப்பழ தோல் போன்றது என்றும், இந்து மதம் என்பது வாழைப்பழம் போன்றது என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்து சனாதனத்தை ஆதரிப்போர் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பேசு பொருளானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு அவரது வீட்டிற்கு செல்லும் போது வாழைப்பழங்களை வாங்கி தோலுரித்து அதை கீழே போட்டுவிட்டு, வெறும் வாழைப்பழத்தை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் கருதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு 108 வாழைப்பழங்களை வாங்கி அதனை தோல் உரித்து, பிரபல தனியார் கொரியர் நிறுவனம் மூலம் அனுப்ப முற்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவருக்கும் காவல்துறைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக காவல்துறையினர் அந்த பார்சலை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். பார்சல் பறிக்கப்பட்டதையடுத்து சீனிவாசன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். மேலும், புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அதில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா தொடர்பான விசாரணை.. கோவையில் பரபரப்பு!