புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்தி விடுதியில் வசித்து வரும் ரெங்கதுரைக்கும் அவரது உறவினரான கருப்பையா என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.26) ரெங்கதுரை(45) மற்றும் கருப்பையா(26) இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கருப்பையா மற்றும் ரெங்கதுரை இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கைகலப்பு முற்றிய நிலையில் அரிவாளை எடுத்து வந்து ரெங்கதுரையை, கருப்பையா சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகி விழுந்துள்ளது. சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வெட்டுப்பட்ட ரெங்கதுரையை உடனடியாக மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ரெங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் துண்டான விரல்களைத் தனி ஐஸ்பெட்டியில் அடைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாளால் வெட்டிய கருப்பையா என்ற இளைஞரை ஆலங்குடி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக ஆலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 2 காளைகள் உயிரிழப்பு