புதுக்கோட்டை: மதவழிபாட்டு தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் இருப்பதால், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை, நகரின் முக்கிய வணிக சாலையான கீழ ராஜ வீதி வழியாக செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று (நவ. 5) தனது பயணத்தை மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தர்வகோட்டை மற்றும் சட்டமன்ற தொகுதியில் அவர் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக புதுக்கோட்டை நகர எல்லையான அண்டக்குளம் விளக்கில் இருந்து பிருந்தாவனம், கீழ ராஜ வீதி வழியாக நடை பயணம் மேற்கொண்டு அண்ணா சிலை அருகே சிறப்புரையாற்ற, பாஜக நிர்வாகிகள் புதுக்கோட்டை காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
20 நாட்களுக்கு முன்னரே காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மருது கணேஷ், ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று, கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமாரிடம், கீழ ராஜ வீதி வழியாக பாதயாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அதற்கான விளக்கக் கடிதம் ஒன்றை கொடுத்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு சம்மன் வழங்க வந்த காவலர்களிடம், அதனை ஏற்ககவும், கையெழுத்திடவும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் விஜயகுமார் மறுத்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், "புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 30(2) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளது.
யாத்திரை பயணம் நடைபெறும் இடமான பிருந்தாவனம் மற்றும் கீழ ராஜ வீதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து பொருட்கள் வாங்கும் பகுதியாக உள்ளது. பிருந்தாவனம் மற்றும் கீழ ராஜ வீதியில் அதிக அளவில் வணிக வளாகங்கள் உள்ளது. யாத்திரையின் மூலம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
மேலும், யாத்திரை பயணம் நடைபெறும் பகுதியின் அருகில் மருத்துவமனை மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இப்பகுதியில், 3, ஆயிரம் பேர் கூடுவதற்கு போதிய இடவசதி இல்லை. பொதுமக்கள் அதிகமாக கூடும் வழியில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் யாத்திரை நடைபயணத்திற்கு கீழ ராஜ வீதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அசாமில் மசூதியில் வைத்து இமாம் படுகொலை... போலீசார் தீவிர விசாரணை