புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வம்பன் காலனியைச் சேர்ந்தவர், குமாரவேலு. தற்போது 50 வயதாகும் இவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். இவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் அப்போது புகார் அளித்தனர்.
கடந்த 8 ஆண்டுகளாக காவல் துறையினர் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் குமாரவேலு நாகாலாந்து மாநிலத்தில் இருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் குமாரவேலுவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
![புதுக்கோட்டை போலீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-02-old-man-recovery-from-naglanth-visual-scr-img-7204435_12122020184342_1212f_1607778822_247.jpg)
தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குமாரவேலுவை மீட்க நாகாலாந்து காவல் துறையினர், நாகாலாந்து தமிழ்ச்சங்கம் ஆகியவற்றிற்கு தகவல் அளித்தார். இங்கிருந்து சென்ற சிறப்பு படையினர் நாகாலாந்தில் சுற்றித்திரிந்த குமாரவேலுவை அம்மாநில காவல் துறையினரின் உதவியோடு மீட்டனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்த பின்னர் நாகாலாந்து தமிழ்ச்சங்கம் உதவியோடு விமானம் மூலமாக குமாரவேலு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் இன்று (டிச.12) காலை அவர் சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு காவல் துறையால் அழைத்து வரப்பட்டார். அவரை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குமாரவேலுவை அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு குமாரவேலு தன் குடும்பத்தினரிடம் இணைய முயற்சி எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.