புதுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம், அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்ததற்காகவே ராமலிங்கம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில், எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில், தமிழ்நாட்டில் 24 இடங்களில் இன்று(ஜூலை 23) என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் 13 பேரை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ஐந்து பேர் தொடர்பான இடங்களில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில், புதுக்கோட்டை உசிலங்குளத்தில் உள்ள ரசீத் முகமது என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரசீத் முகமது, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மண்டல முன்னாள் பொறுப்பாளர் என கூறப்படுகிறது. அவரது வீட்டில் சுமார் ஆறு மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், ரசீத் முகமது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், துண்டு சீட்டில் ஆங்கில வார்த்தையில் எழுதப்பட்ட கோடு வேர்டு, பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், மதுரையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்காக ரசீத் முகமது ஆஜராக சம்மன் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், திருப்பூரில் வேலம்பாளையம் அடுத்த சாமுண்டிபுரம் பகுதியில் முபாரக் பாஷா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 5 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், மடிக்கணினிகள், 2 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்ஐஏ சோதனை நடத்தப்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை!