புதுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தோப்புநாயகம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (52). இவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்விற்காக மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது, உறவினர் வீட்டிற்கு மொய் செய்வதற்காக கீழராஜ வீதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-மில் (SBI ATM) எவ்வளவு தொகை உள்ளது என அறிந்துள்ளார்.
அதில், ஏற்கனவே நெல் விற்பனை செய்த 92 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி இருப்பு இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பணத்தை எடுக்க முயன்றபோது, அருகில் நின்ற மூன்று மர்ம நபர்கள் அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி, அடுத்த இயந்திரத்தில் பணம் எடுக்குமாறு சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.
அப்போது அவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்திய நிலையில், அவரின் கவனத்தை திசைத் திருப்பி பாஸ்வேர்டு எண்ணை அறிந்து கொண்ட அந்த மர்ம நபர்கள், அவரை நூதன முறையில் ஏமாற்றி இங்கு பணம் இல்லை எனக் கூறி, வேறு ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சிவக்குமார், மற்றொரு ஏடிஎம்மில் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது, பணம் வராததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சிவக்குமாருக்கு, செல்போனில் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் (ஆகஸ்ட் 21) திருவோணம் எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்று, தான் பணம் எடுக்காமல் பணம் எடுத்ததாக செய்தி வந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு அவரது ஏடிஎம் கார்டை பார்த்த வங்கி ஊழியர்கள், அந்த கார்டு சிவக்குமாருடையது இல்லை என்றும் இது போலியான ஏ.டி.எம் கார்டு எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் வங்கிக் கணக்கில் இருந்த 90 ஆயிரம் ரூபாயானது, புதுக்கோட்டை எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் இருந்து ரூ.10 ஆயிரம் வீதம் இரண்டு முறை இருபதாயிரம் ரூபாயும், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தஞ்சையில் உள்ள இ.பி.கே நகைக் கடையில் நகையும் வாங்கப்பட்டுள்ளது.
மறுநாள் தஞ்சாவூரில் அதே நகைக்கடை அருகில் உள்ள காந்தி ரோடு ஏடிஎம்மில் இருந்து ரூ.10 ஆயிரம் வீதம் இரண்டு முறை ரூபாய் இருபதாயிரமும் என மொத்தம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக சிவக்குமார் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை, புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டை எஸ்.பி.ஐ, ஏ.டி.எம் அறையில் பதிவான சிசிடிவி காட்சி, தஞ்சாவூர் இ.பி.கே நகைக் கடைகளில் பதிவான சி.சி.டிவி காட்சி ஆகியவற்றை கைப்பற்றி பணம் திருடிய நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாகியும் இதுவரை முறையான விசாரணை நடத்தவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயி சிவக்குமார் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “காவிரி விவகாரத்தில் இரு முதலமைச்சர்களும் பேசி தீர்வு காண வேண்டும்” - ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்!