புதுக்கோட்டை: இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது கட்சியினரை தக்க வைத்துக் கொள்வதிலும், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு கட்சியினர் மாற்றுக் கட்சிக்கு செல்லும் சூழல் இருந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் அதிருப்தியாக உள்ளவர்களை அதிமுகவில் இணைக்கும் பணியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிரம் காட்டினார். அதன்படி புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மாற்று கட்சியினர் 500க்கும் மேற்பட்டோரை, குறிப்பாக திமுகவில் ஒன்றிய அளவில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து, அதிமுகவில் இணைக்கும் பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலிருந்து இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. மண்டபத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் முன்பிலிருந்து விஜயபாஸ்கர் அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரை அதிமுக கட்சி கரைவேட்டி போர்த்தி அனைவரையும் வரவேற்றார் விஜயபாஸ்கர்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையின் கீழ் வந்துள்ள உங்களுக்கு உரிய மரியாதையும், தங்கள் தகுதிக்கேற்ப பொறுப்புகளும் வழங்கப்படும். சிறப்பாக செயல்படுங்கள் எதிர்காலம் காத்திருக்கிறது என்று உற்சாகமூட்டும் வகையில் பேசினார். அதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் மற்றும் அதிமுகவினருக்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று 24 மணி நேரத்தில் அன்னவாசல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளருக்கு, மாவட்டச் செயலாளர், அமைச்சர்களிடமிருந்து அசைன்மென்ட் பறந்தது. அதன்படி உடனடியாக அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
அதன்படி அதிமுக நிகழ்ச்சி நடைபெற்ற அதே மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண மண்டபத்திலிருந்து இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பிலிருந்து புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரை திமுக கட்சி கரைவேட்டி போர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஊழல் செய்து வந்த பணத்தை செலவு செய்து, ஆட்களை திரட்டி மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு என்று நடத்தி உள்ளார். உண்மையிலேயே திமுகவின் உண்மை விசுவாசிகள் கண்டிப்பாக அதிமுகவிற்கு செல்ல மாட்டார்கள்.
ஏனென்றால் தமிழக முதலமைச்சரின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று அடைந்துள்ளன. மேலும், தற்போது முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் செய்த குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி அவர்கள் வெகு விரைவில் சிறைக்கு செல்வது உறுதி" என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எதைப் பார்த்தும், எதற்காகவும், யாருக்கும் பயப்படாத தொண்டர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது திமுக மட்டுமே. இதுதான் மற்ற கட்சிக்கும் திமுகவுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எனவே, தொண்டுகள் யாரும் தவறான பாதையில் செல்லாமல் நல்ல வழியிலேயே செல்ல வேண்டும்.
இன்று இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்கிய நமது தலைவர் கண்டிப்பாக உங்களையும் எந்த விதத்தில் கைவிட மாட்டார். தற்பொழுது மாற்றுக் கட்சியில் இருந்து வந்துள்ளவர்களையும் அரவணைக்கும் ஆற்றல் பெற்றவர் நமது திமுக தலைவர்" என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "திமுக தலைவரின் தலைமையினை ஏற்று, தற்போது நடைபெற்று வரும் ஆட்சியின் சான்றாக விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 146 பேர் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. திமுகவிலிருந்து ஒருவரை அழைத்துச் சென்றால், நாங்கள் 100 பேரை அழைத்து வருவோம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி. எங்களைப் பொறுத்தவரை யாரையும் வலுக்கட்டாயமாக கட்சியில் சேர்ப்பது கிடையாது. அவ்வாறு நாங்கள் சேர்க்க முற்பட்டால் இது போன்ற பல மண்டபங்கள் தேவைப்படும். இதற்கான முகாமும் விரைவில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஏற்பாட்டளரும், அதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் விசாரித்த போது, "திமுகவினர், அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சி கண்டு உடனடியாக இது போன்ற மாற்றுக் கட்சியினர் திமுக இணையும் நிகழ்ச்சி நடத்தி இருப்பது அதிமுகவை கண்டு திமுக பயப்படுவதை காட்டுகிறது.
மேலும், இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யாரும் மாற்றுக் கட்சியினர் அல்ல, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தவர்கள். நாங்கள் செய்த நிகழ்ச்சியை மறைப்பதற்காகவே இவர்கள் உடனடியாக இந்த நிகழ்ச்சியை செய்துள்ளனர். மேலும், பல்வேறு பஞ்சாயத்துகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வெகு விரைவில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.