புதுக்கோட்டை மாவட்டம் ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மெய்வழிச்சாலை கிராமம். இந்தக் கிராமத்தை 1940ஆம் ஆண்டு வாக்கில் காதர்பாட்ஷா என்பவர் உருவாக்கி அங்கு "மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய் மதம்" என்ற தனி மதத்தையும் கொண்டு வந்தார். இந்த மதமானது, 'மதம், சாதி ஆகியவைகளைத் துறந்து மனிதர்கள் மனிதர்களாகவே சங்கமிக்க வேண்டும்' என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டது.
எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மதத்தில் சேரலாம். அப்படி சேர்பவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சாலை அல்லது மெய்வழி என்ற அடைமொழியை வைத்துக்கொள்வார்கள். தற்போது இந்த மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருகிறார்கள். இம்மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்ததிகள் என்றும் அழைக்கப்டுவது மட்டுமல்லாமல் ஆண்கள் தலையில் முண்டாசு கட்டியும் பெண்கள் தலையில் முக்காடிட்டும் கொள்கிறார்கள்.
பல வித்தியாசமான நெறிமுறைகளை பின்பற்றும் இவர்கள் தங்களுக்கென்று பல கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அசைவ உணவு மற்றும் மது, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் அனந்தர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடெல்லாம். வெளியூரில் வசிக்கும் அனந்தர்கள், அனந்தகிகள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் இருக்கிறது. அது சூழ்நிலை கருதியதாகும்.
இவர்கள் துக்க காரியங்களுக்கு அழுவது இல்லையாம். கணவர் இறந்தாலும் மனைவி பூ, பொட்டுகளை அழிப்பதுமில்லையாம். அதனால் இங்கு கைம்பெண்களே இல்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றனர். பல வருடங்களாக மின்சார வெளிச்சமே படாத இந்தக் கிராமம் சமீப காலமாகத்தான் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைப் பெற்று வருகிறது. பொங்கல், கார்த்திகை தீப விழா தவிர வேறு எந்த விழாக்களும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.
காதர்பாட்ஷா தியானம் செய்த இடத்தில் சிறிய அலங்காரக் கொட்டகை இட்டு அதை வழிபடும் இவர்கள், ஊருக்குள் இருக்கும் இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம், இந்த ஊரை போற்றுதலுக்கு உரிய ஒரு புண்ணிய தலமாகக் கருதுவதே. உள்ளூர் வாசிகள் யாரும் ஆடு, மாடு, கோழி என்று எந்த ஜீவனையும் வளர்ப்பதுமில்லை. குழந்தையாயினும் பெரியவர்களாயினும் நடக்க முடியவில்லை என்றால் உரியவர்கள் அந்த சிறு நீரைக் கூட ஒரு கழிவுப் பாத்திரத்தில் பிடித்துக் கொண்டுபோய் ஊருக்கு வெளியில் கொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த கட்டுப்பாடு இருப்பதால் கிராமம் மிக தூய்மையானதாகவும் இருக்கிறது. நூறு சதவீதம் படித்தவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். வீட்டுக்கொருவரோ இருவரோ அரசுப் பணியிலும் இருக்கிறார்கள். தற்போது காதர்பாட்ஷாவின் மகன் வர்க்கவான் சபைக்கு அரசராக இருந்து மெய்வழிச்சாலை மக்களை வழிநடத்தி வருகிறார். காலம் காலமாக சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிந்த வாழ்ந்த சமூகத்தை புதிதாக வந்த ஒற்றை மதம் பிணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதம், சாதி குறிப்பிடவில்லை என்றால் பள்ளியில் இடமில்லையாம் - காரணம் இதுதான்!