புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மணல் அள்ளப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மணல் கொள்ளையைத் தனி நபரின் கனரக வாகனங்களில் ஜே.சி.பி. மூலம் நடைபெறுகிறது. இதனால் ஆற்று பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசிடம் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதைக் கண்டித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைச் செப்டம்பர் 9 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.