புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த போஸ் மணி, அமுதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு போஸ் மணி குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி அமுதா பணம் தராததால் ஆத்திரமடைந்த போஸ் மணி அருகில் இருந்த கட்டையால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார், இதில் பலத்த காயம் அடைந்த அமுதா உயிரிழந்தார்.
இதுகுறித்து மாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போஸ் மணியை கைது செய்தனர், இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, மனைவியை அடித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் கொலை செய்ததற்கு சாட்சியாக இருந்த தனது குழந்தைகளை மிரட்டிய குற்றத்திற்காக மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெற்றோர்கள் இல்லாத நிலையில் பரிதவித்துள்ள அமுதாவின் குழந்தைகளுக்கு இழப்பீடு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதிக்கு மகிலா நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.