விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவராக போற்றப்படும் பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாள் விழா உலகத்தமிழர்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டையில் உள்ள காமராஜபுரத்தில் தமிழ் தேசிய கட்சியின் சார்பில் பிரபாகரனின் 65ஆவது ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 65 பெண்கள் ஒரே இடத்தில், மண் பானையில் பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு பிரபாகரின் புகழை போற்றி அப்பகுதி மக்களோடு இணைந்து இந்த விழாவைக் கொண்டாடினர். அப்போது, அவர்கள் பிரபாகரனை வாழ்த்தியும் தமிழ் ஈழம் மலர வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் கோயம்புத்தூரில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைப் புலிகள் கட்சி மாநில பொதுசெயலாளர் ஆறுமுகம், விரைவில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதே பிரபாகரனின் லட்சியம் என்றும் ஈழத்தமிழர் விடுதலை பெற எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அதற்காக போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மாறன் தலைமையில் 65 பேர் ரத்ததானம் செய்வதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் என 65க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்து பிரபாகரன் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: நான் மீசை வைத்து பூணூல் போட்டால் பிராமணர் என ஏற்றுக்கொள்வார்களா - சீமான் !