புதுக்கோட்டை: பூங்குடி கிராமத்தில் கடந்த 30ஆம் தேதி தனியார் வானவேடிக்கை பட்டறையில் வெடி விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெடி விபத்து ஏற்பட்டு அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.
நிவாரணம் கூட அறிவிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் சமீபத்தில் இந்த வெடி விபத்தில் இறந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்ற இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று முன்தினம் அந்தந்த குடும்பங்களை சந்தித்து நிவாரணத் தொகைகளை வழங்கினார். இந்த நிலையில் நேற்று இரவு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பேரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து இறந்த குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “வெடி விபத்தில் இறந்த மூன்று பேரும் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சிகிச்சை பெற்று வருவதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவ்வப்போது தணிக்கையும் செய்து வந்தாலும் ஒரு சில நேரங்களில் விபத்து தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியுள்ளது.
வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வெடி விபத்து தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அதிமுக சார்பில் வைத்துள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், “எதிர்க்கட்சி என்றாலே குற்றம்சாட்டுபவர்கள் தான். சம்பவம் நடந்த உடனேயே திமுக நிர்வாகிகள் அந்த இடத்திற்குச் சென்று பல்வேறு முதலுதவிகளை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளோடு நாங்கள் தொடர்பு கொண்டு தரமான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை’’என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக யாத்திரையில் கட்சியின் தலைவர், சிறையில் இருக்க வேண்டியவர்கள் தற்போது சிறைத்துறை அமைச்சராக உள்ளார் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது வைத்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அண்ணாமலை அரைவேக்காடுத் தனமாகப் பேசி வருகிறார். அரைவேக்காடு அண்ணாமலையாக உள்ளார். ஜெயலலிதா என் மீது பொய் வழக்கு புனைந்து கீழமை நீதிமன்றத்தில் நான் விடுவிக்கப்பட்டதால், ஜெயலலிதாவால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தான் என் மீது நிலுவையில் உள்ளது. என் மீது அவதூறு செய்ததற்காக அண்ணாமலை மீது வழக்குத் தொடரலாம்.
ஆனால் அவர் மீது வழக்கு தொடர்ந்து அவரை பெரிய ஆளாக ஆக்கவும், அவரை பின்தொடரவும் நான் விரும்பவில்லை. மகளிர் உரிமை திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களை குழப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் என்றாலே குற்றம் சுமத்துபவர்கள் தான்.
நாங்கள் உரிமைத் தொகையை கொடுத்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் தான் விவரம் தெரிய வரும்’’என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் காவல்துறை சித்திரவதை தடுக்கப்பட வேண்டும்: வழக்கறிஞர் ஹென்றி டிபேன்!