புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே மட்டாங்கால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் நீண்ட நாட்களாக முட்டை பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மற்ற மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என பள்ளி மாணவ மாணவிகள் வீட்டில் சென்று பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டபோது நீங்கள் அமைப்பாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதுகுறித்து அமைப்பாளர்களிடம் கேட்டபோது இங்கு முட்டை பற்றாக்குறை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக அமைப்பாளர் தெரிவித்தார். இது குறித்து மாணவரிடம் கேட்ட போது 161 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு வருவதாகவும் இதில் 48 மாணவ மாணவிகளுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவில் முட்டை கிடைக்கவில்லை என மாணவ மாணவிகள் புகார் கூறினர்.
மேலும் தொடர்ந்து இந்த அவலநிலை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் சென்னை வருகை!