புதுக்கோட்டை: கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எம்.பி.ஜோதிமணி பேசியதாவது, "இந்தியா என்ற பெயர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா என்ற பெயரில் உள்ள கூட்டணி தான் நரேந்திர மோடி அரசாங்கத்தை, ஆட்சியை விட்டு இறங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்க உள்ளது. இந்தியாவில் எதையாவது மாற்ற வேண்டும் என்றால் மோடியின் விரோத அரசை தான் மக்கள் மாற்றவேண்டும்.
மேலும், 9 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவை நாங்கள் மாற்றுவோம் என்று கூறி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவின் பெயரை தான் அவர்கள் மாற்றுகின்றனர். இந்தியா என்பது நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் சொந்தமானது அல்ல. 140 கோடி மக்களுக்கு சொந்தமான தேசம் இது.
மோடி இந்த 9 ஆண்டுகளில் எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்றுதான் பெயர் பலகை வைத்திருப்பார்கள. இந்திய அரசியல் சாசனமும் அதைத்தான் குறிப்பிடுகிறது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு எவ்வளது மோசமாக உள்ளது என்பதற்கு உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளே சான்று.
ஒரு அமைச்சருக்கு இந்தியாவில் இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, உதயநிதி மீது வழக்கு பதிவு செய்வது, அவர்களின் வன்மத்தை காட்டுகிறது. பெயர் மாற்று அரசியல் ஒரு மலிவான அரசியல் யுத்தி.
பெயர் மாற்றத்தினாலேயோ, இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதுனாலேயோ மோடி அரசு தோல்வியில் இருந்து தப்பிக்காது. பாஜக 9 ஆண்டுகாலமாக மக்களுக்காக எதுவும் செய்யாத நிலையில் தற்போதைய பிரச்சனைகளை மடைமாற்றும் வேலையாக பாரத் என்ற பெயர் சூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்துக்கள் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை. தமிழ்நாட்டில் ஒரு விஷயத்தை சொல்வதற்கும் அதனை வடநாட்டில் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. சனாதனம் என்ற பெயர் தமிழ்நாட்டில் மனுநிதியை தான் சொல்கிறோம், பகவத் கீதையை சொல்லவில்லை. பகவத் கீதையோ, திருக் குர்ஆனோ, பைபிளோ மனிதர்களை பிரிக்கவில்லை சாதியின் அடிப்படையில் மனுநீதி தான் பிரிக்கிறது.
தமிழகத்தில் சனாதனம் என்ற சொல் மனுநீதியைக் குறிக்கிறது. உதயநிதி பேசியது ஏற்றத்தாழ்வு குறித்து மட்டுமே. ஒவ்வொரு பகுதிகளிலும் சனாதனம் குறித்து பல்வேறு புரிதல்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை சனாதனம் என்றால் மனுநீதி மற்றும் ஏற்றத்தாழ்வு தான். அதனால்தான் ஒரு நாடு ஒரு தேசம் ஒரு மொழி ஒரு கலாசாரம் ஒரு கட்சி ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு உதவாது.
இந்துத்துவா என்பது பாஜகவின் அழிவு ரீதியான அரசியல் கோட்பாடு. பாஜக இந்துக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மனித குலத்திற்குமே கேடு விளைவிக்கின்ற கட்சி. பெயர் மாற்றும் அரசியல் ஒரு மலிவான அரசியல் என்று நான் பார்க்கிறேன். மனுநீதி என்பது வேறு பகவத் கீதை என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு இந்துத்துவா என்பது வேறு.
பாரத் என்று பெயர் மாற்றுவதால் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. நாடாளுமன்ற கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் பேசுவோம். 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெயர் மாற்ற மசோதா உடன் வரமாட்டார்கள் என்பது என் கருத்து. ஏனென்றால், நாட்டின் பெயரை நினைத்தவுடன் உடனடியாக மாற்றி விட முடியாது.
பெயர் மாற்றம் கொண்டு வராததற்கு முன்பாகவே குடியரசுத் தலைவரின் நிகழ்வில் பாரத் என பெயர் மாற்றி அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. நாடு என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த நாடு அவர்களுக்கு சொந்தமானது இல்லை மக்களுக்குத் தான் சொந்தமானது என்பதை வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றியை பெற்று ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!